Tuesday, April 19, 2016

Wednesday, June 2, 2010

கேள்வி எண் 1.
குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில்; உஸ்மான் (ரலி) அவர்களால் எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால் தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?.

பதில்:

இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில் திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.

1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்பட்டு, அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இன்றைக்கு நம்மிடையே எழுத்து வடிவில் இருக்கும் அருள்மறை குர்ஆன்.
அல்லாஹ்வால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள்; அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டவுடன், அதனை அவர்கள் மனனம் செய்து கொள்வார்கள். பின்னர் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, தனது தோழர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்கள். அத்துடன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளவும் செய்வார்கள். எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ருஅஅi) எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள். எனவேதான் இறைவனால் அருள்மறை வசனங்கள் இறக்கியருளப்பட்டதும் - அந்த வசனங்களை தனது தோழர்களுக்கு தெரிவிப்பார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் நபிகளால் தெரிவிக்கப்பட்ட இறைமறை வசனங்களை எழுதிவைத்துக் கொள்வார்கள். தம் தோழர்களால் எழுதிவைக்கப்பட்ட வசனங்களை மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - தம் தோழர்களை வாசிக்கக் சொல்லி கேட்டு சரியானதுதானா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள். அவ்வாறு எழுதப்பட்டதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனயடியாக திருத்தி எழுதச் சொல்லி - அந்த தவறுகளையும் திருத்திக் கொள்வார்கள். அதேபோன்று தம் தோழர்களால் மனனம் செய்யப்பட்ட வசனங்களும் - தம் தோழர்களால் எழுதப்பட்ட வசனங்களும் சரியானது தானா என்பதை - மேற்படி வசனங்களை மனனம் செய்த தம்; தோழர்களை ஓதச் சொல்லி அதனைiயும் உறுதி செய்து கொள்வார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அருள்மறை குர்ஆனாக தொகுக்கப்பட்டது.

2. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அத்தியாயத்தின் வசனங்களும், அல்லாஹ்வால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.
அருள்மறை குர்ஆன் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் அவசியம் ஏற்படும் போதெல்லாம் சிறிது, சிறிதாக இறக்கியருளப்பட்டது. குர்ஆனிய வசனங்கள் அது இறக்கியருளப்பட்ட கால வரிசைப்படி தொகுக்கப்படவில்லை. அருள்மறை கும்ஆனின் அத்தியாயங்களும் அந்த அத்தியாயங்களுக்கு உண்டான வசனங்களும் அல்லாஹ்வால் - வானவர் கோமான் - ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆனிய வசனங்களை எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறவிக்கிறார்களோ, அப்போதெல்லாம் அந்த குர்ஆனிய வசனம் எந்த அத்தியாயத்தைச் சார்ந்தது, அந்த அத்தியாயத்தின் எந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனம் என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறிவிப்பார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் - ஜிப்ரில் (அலை) அவர்களிடம் - வசனங்களின் வரிசைக்கிரமங்களையும், சரியான வசனங்கள் தானா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த கடைசி ஆண்டில் அருள்மறை குர்ஆன் முழுவதும் சரியானதுதானா என்று இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட முறைகள் மூலம் அண்ணல் நபி (ஸல்) உயிரோடிருந்த காலத்திலேயே - அருள்மறை குர்ஆனின் எழுத்து வடிவமும்- அருள்மறை குர்ஆனை மனனம் செய்த தோழர்களின் மனப்பாட வடிவமும் - நபிகளாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சரிபார்க்கப்பட்டு - தொகுக்கவும் பட்டது என்பதற்கு மேற்கண்ட விளக்கங்கள் சான்றாக அமைந்துள்ளன.

3. அருள்மறை குர்ஆன் ஒரு பொதுவான வடிவில் பிரதியெடுக்கப்பட்டது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அதன் சரியான வரிசைக் கிரமப்படி இருந்தது. ஆனால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் துண்டு துண்டான தோல்களிலும், தட்டையான கல் துண்டுகளிலும், மரப் பட்டைகளிலும், பேரீத்த மரத்தின் கிளைகளிலும், மற்றுமுள்ள மரக் கிளைகிலும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள், பல பொருட்களிலும் தனித்தனியாக எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை, ஒரே இடத்தில் இருக்கும்படியாக தாள் (ளூநநவள) போன்ற ஒரு பொதுவான பொருளில் - எழுதும்படி பணித்தார்கள். அவ்வாறு பல பொருட்களில் எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை தாள் போன்ற பொருளில் எழுதி - அருள்மறை குர்ஆனின் மொத்தத் தொகுப்புகள் எதுவும் - சிதறிப்போய் விடக்கூடாது என்பதற்காக அதனைக் கட்டியும் வைத்தார்கள்.

4. உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரே பொருளில் தொகுத்து எழுதப்பட்டிருந்த அருள்மறை குர்ஆனை பிரதி எடுக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
அருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் தம் நாவால் மொழியும் போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல் ) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் . தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் - எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் - சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.

மேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை - நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது - அதனை எழுதி வைத்துக் கொண்ட தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து - தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸெய்த் பின் தாபித் (ரலி) அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச் செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால் இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர் அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் - எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன் காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன ரஷ்யாவின் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

5. அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்பட்டது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனில் - அரபி மொழி அல்லாதவர்களும் - அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி - பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இக்குறியீடுகளை - ஃபத்ஆ - தம்மா - கஸ்ரா என்று அரபி மொழியிலும், ஸபர் - ஸேர் - பேஷ் என்று உருது மொழியிலும் அழைப்பார்கள். அரபி மொழி அரபியர்களின் தாய்மொழி என்பதால் - அருள்மறை குர்ஆனின் வசனங்களை சரியான முறையில் உச்சரித்து ஓதுவதற்கு - அரபியர்களுக்கு மேற்படி குறியீடுகள் தேவையில்லை. ஆனால் அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு - குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத வேண்டுமெனில் மேற்படி குறியீடுகள் அவசியம். மேற்படி குறியீடுகள் ஹிஜ்ரி 66-86 வரை (கி;. பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த - உமையாத் - காலத்தின் ஐந்தாவது கலீஃபா - மாலிக் அர்-ரஹ்மான் என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில் இணைக்கப்பட்டது.

தற்போது நம்மிடையே இருக்கும் அருள்மறை பிரித்தறியக் கூடிய குறியீடுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறையில் இவ்வாறான குறியீடுகள் இல்லை என்ற காரணத்தால் குர்ஆனில் வேறுபாடுகள் இருக்கின்றது என்று சிலர் வாதிடலாம். அவ்வாறு வாதிடுவோர்கள் 'குர்ஆன்' என்ற வார்த்தைக்கு 'ஓதுதல்' என்ற பொருள் உண்டு என்பதை அறியாhதவர்கள். எனவே குர்ஆனை அதன் வசனங்களின் உச்சரிப்பு மாறாமல் ஓதுவதுதான் இங்கு முக்கியமேத் தவிர, எழுத்துக்களோ அல்லது பிரித்தறியக் கூடிய குறியீடுகளோ அல்ல. அரபி வார்த்தைகளின் உச்சரிப்பு சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதன் அர்த்தங்களும் சரியானதாகத்தான் இருக்கும்.

6. அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்:
அருள்மறை குர்ஆனின் பதினைந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹிஜ்ரின் ஒன்பதாவது வசனத்தில் அல்லாஹ் அருள்மறை குர்ஆனை அவனே பாதுகாப்பதாக கூறுகின்றான்:

'நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். நிச்ச்யமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்.'
(அல்-குர்ஆன் 15 : 9)

கேள்வி எண்: 2
காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?


பதில்:

இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி - அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு - இஸ்லாமியர்களுக்கு - இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்.

1. அருள்மறை குர்ஆனின் வசனம்:
இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறார்கள்.

'முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும், இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள்' என்கிற வசனம்தான் அது.

2. மேற்படி வசனம் போர்ச் சூழலில் சொல்லப்படுகிற வசனம்:
இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் - மேற்படி வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்பதை வசதியாக மறந்து விட்டு - விமரிசனம் செய்கிறார்கள். மேற்படி வசனம் எதனால் - எந்த சூழ்நிலையில் சொல்லப்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில,; - மேற்படி அத்தியாயத்தின் முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டும். மேற்படி வசனம் மக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் - இறைவனுக்கு இணைவைப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் பற்றி தெரிவிக்கின்றது. மேற்படி ஒப்பந்தம் மக்காவில் உள்ள இணை வைப்பவர்களால் மீறப்பட்டது. எனவே மீறப்பட்ட ஒப்பந்தத்தை சரி செய்ய வேண்டி இணைவப்பவர்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் அளிக்கப் பட்டது. இல்லையெனில் அவர்கள் மீது போர் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனம் கீழ்க்கணடவாறு கூறுகின்றது:
'போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.'
(அல் குர்ஆன் 9: 5)

மேற்படி வசனம் ஒரு போர்ச் சூழலில் சொல்லப்படுகின்றது.

3. அமெரிக்க - வியட்நாம் போர் - ஓர் உதாரணம்:
அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையே போர் நடந்த செய்தி நாம் அனவைரும் அறிந்த ஒன்று. அவ்வாறு போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அமெரிக்க ஜனாதிபதியோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியோ, அமெரிக்க வீரர்களிடம் - 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று உத்தரவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மேற்படி போர்ச் சூழலைப் பற்றி குறிப்பிடாமல் - தனியே 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று சொன்னதாக சொன்னால் - நாம் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியையோ மிகப்பெரிய கொலையாளி என்றுதான் எண்ணத் தோன்றும். மாறாக அமெரிக்காவிற்கும் - வியட்நாமிற்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு சொன்னார் என்று குறிப்யிட்டால் அது அறிவு பூர்வமாகத் தோன்றும். அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக அவ்வாறு சொன்னார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

4. அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டதே.!
அதுபோலவே அருள்மறை குர்ஆன் அத்தியாயம் ஒன்பது ஸுரத்துத் தௌபாவின் ஐந்தாவது வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டது. போர் நடக்கும் பொழுது எதிரிகளை கண்டு பயந்து விடாதீர்கள். அவர்களை வெட்டி வீழ்த்துங்கள் என்ற இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரியமூட்டுகிறது, அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம்.

5. அருண் சூரி ஐந்தாவது வசனத்திலிருந்து 7வது வசனத்திற்கு தாவி விடுகிறார்:
இஸ்லாத்தைப் பற்றி விமரிசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர் இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் அருண் சூரி. அவர் எழுதியுள்ள ' ஃபத்வாக்களின் உலகம்' என்கிற புத்தகத்தின் 572 வது பக்கத்தில் அருள்மறையின் மேற்படி வசனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஐந்தாவது வசனத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர் உடனடியாக ஏழாவது வசனத்திற்கு தாவி விடுகிறார். இதன் மூலம் அருண் சூரி ஐந்துக்கும் ஏழுக்கும் இடையில் உள்ள 6வது வசனத்தை விட்டுவிட்டார் என்பது அறிவுள்ள எந்த மனிதரும் புரிந்து கொள்ளலாம்.

6. அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் 6வது வசனம் மேற்படி கட்டுக்கதை உண்மையல்ல என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் ஆறாவது வசனம் இஸ்லாம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

'(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'
(அல் குர்ஆன் 9:6)

அருள்மறை குர்ஆன் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இறைவனுக்கு இணைவைப்பவர்கள் உங்களிடம் புகலிடம் தேடுவார்கள் எனில், அவர்களுக்கு அபயமளியுங்கள் என்று சொல்வதோடு நின்று விடாமல், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை அவருக்கு பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்துகிறது. இன்றைய நவநாகரீக உலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு ராணுவத் தளபதியாக இருந்தால் - போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரி ராணுவ வீரர்களை மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் எந்த ராணுவ தளபதி எதிரி ராணுவ வீரர்களை, அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடையும்வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்?.

இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை. அமைதியையும் - சமாதானத்தையும் விரும்பக்கூடிய மார்க்கம் என்பதை மேற்கூறிய குர்ஆனிய வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்
2-6-2010 Wednesday
கேள்வி எண்: 3
குர்ஆனில் இறைவன் சொல்வதாக வரும் இடங்களில் எல்லாம் 'நாம்' அல்லது 'நாங்கள்' என்ற பன்மையான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாம் பல தெய்வ கொள்கையில் நம்பிக்கை உடையதாக தோன்றுகிதே. இது சரியா?.

பதில்:

இஸ்லாம் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாக கொண்ட மார்க்கம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்கிற கொள்கையில் எந்தவித மாறுபாடும் இன்றி செயல்பட்டு வரக் கூடிய மார்க்கம் இஸ்லாம். அல்லாஹ் ஒருவனே. அவனுக்கென்று தனித்தன்மைகள் உண்டு என்ற நம்பிக்கையில் எந்தவித மாற்றமுமில்லை. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் தன்னைப்பற்றி குறிப்பிடும்பொழுது 'நாம்' அல்லது 'நாங்கள்' என்கிற வார்த்தையை பயன் படுத்தப்படுகிறது. அவ்வாறு 'நாம்' அல்லது 'நாங்கள்' என்கிற வார்த்தையை பயன் படுத்துவதால் இஸ்லாம் பல தெய்வக் கொள்கையை உடையது என்கிற வாதம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத வாதமாகும்.

இரண்டு விதமான பன்மைகள்
ஒவ்வொரு மொழியிலும் இரண்டு விதமான பன்மைகள் உள்ளன. ஒன்று -எண்ணிக்கையில் அல்லது அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டெனில் அதனை பன்மை என்பதும், ஒரு மனிதருக்கு அளிக்கக் கூடிய 'மரியாதைப் பன்மை' என்றும் இரண்டு வகையான பன்மைகள் உள்ளன

அ. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் - இங்கிலாந்து நாட்டின் ராணி தன்னைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'I-ஐ' என்று குறிப்பிடாமல் 'we-வீ' என்று குறிப்பிடுவார். இதற்கு 'மரியாதைப் பன்மை' (Royal Plural) என்று பெயர்.

ஆ. இறந்து போன இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஹிந்தியில் பேசும் பொழுதெல்லாம் 'ஹம் தேக்னா சாத்தா ஹை' - நாம் பார்க்க விரும்புகிறோம்' என்று உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இங்கும் 'ஹமே' என்கிற ஹிந்தி வார்த்தைக்கு 'நாம்' என்ற பொருளாகும். 'ஹமே' என்கிற ஹிந்தி வார்த்தையை - ஹிந்தி மொழியில் உள்ள மரியாதைப் பன்மைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

இ. அது போலவே அல்லாஹ், தன்னைப் பற்றி அருள்மறையில் குறிப்பிடும் பொழுது 'நஹ்னு' (நாம் அல்லது நாங்கள் என்ற பொருள்) என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்டது என்கிற அர்த்தத்தில் வருகின்ற பன்மை அல்ல. மாறாக மரியாதைப் பன்மைக்கு பயன்படுத்தக் கூடிய வார்த்தை.

ஏகத்துவம் அல்லது ஓரிறைக் கொள்கை என்பது இஸ்லாத்தின் அடிப்படை தூண்களில் ஒன்று. அல்லாஹ் ஒருவனே இருக்கின்றான். அவனது தன்மைகள் தனித்தவை. தனித்தன்மை வாய்ந்தவை என்கிற வசனங்கள் அருள்மறை குர்ஆனில் பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் நூற்றுப் பன்னிரெண்டு ஸுரத்துல் இக்லாஸின் முதல் வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.

'(நபியே!) நீர் கூறுவீராக!. அல்லாஹ் - அவன் ஒருவனே.!'(அல்குர்ஆன் 112:1)
மேற்கண்ட அருள்மறையின் வசனத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கம் ஓரிறைக் கொள்கைக்கு உரிய மார்க்கம் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி எண்: 4
இஸ்லாமியர்கள் 'விட்டொழிக்கும் விதி' யில் நம்பிக்கையுள்ளவர்கள். (குர்ஆனில் முதலில் அருளப்பட்ட வசனங்களை விட்டு விட்டு, அதற்கு பின்பு அருளப்பட்ட வசனங்களில் நம்பிக்கை கொள்வது). இவ்வாறு செய்வது, இறைவன் தவறாக ஒரு வசனத்தை இறக்கிவிட்டு, பின்னர் வேறு ஒரு வசனத்தின் மூலம் செய்த தவறினை திருத்திக்கொள்வது போல் தெரியவி;ல்லையா?.

பதில்:

வித்தியாசமான இரண்டு பொருள் கொள்ளல்:
அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 106வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது:
'ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?.' (அல் குர்ஆன் 2 : 106)
மேற்படி வசனத்திற்கு அணிசேர்க்கும் வகையில் அருள்மறையின் பதினாறாவது அத்தியாயம் ஸுரத்துன் நஹ்லின் 101 வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.
'(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால் (உம்மிடம்) 'நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்' என்று அவர்கள் கூறுகிறார்கள். எ(ந்த நேரத்தில் எ)தை இறக்க வேண்டு;மென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். எனினும் அவர்களில் பெரும்பாலோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்கள்.
' (அல்குர்ஆன் 16 : 101)

மேற்கண்ட இரண்டு வசனங்களிலும் 'ஆயத்' என்கிற அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டிருக்கிறது. மேற்படி 'ஆயத்' என்கிற அரபி வார்த்தைக்கு 'இறைவனின் அத்தாட்சிகள்' என்றும் 'இறைவசனங்கள்' என்றும் 'இறை வேதங்கள்' என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

அருள்மறையின் இரண்டாம் அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 106 வது வசனத்திற்கு நாம் இரு விதங்களில் பொருள் கொள்ளலாம்.
மேற்படி வசனத்தில் குறிப்பிட்டுள்ள 'ஆயத்' என்கிற அரபி வார்த்தைக்கு இறைவேதங்கள் என்று பொருள் கொண்டால் அருள்மறை குர்ஆன் என்று பொருள் கொள்ள வேண்டுமேத் தவிர, அருள் மறை குர்ஆனுக்கு முன்பிருந்த வேதங்களான தவ்ராத் - இன்ஜீல் - ஜபூர் வேதங்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது, குர்ஆனுக்கு முந்தைய வேதங்களான தவ்ராத் - இன்ஜீல் - ஜபூர் போன்ற வேதங்கள் மறக்கப்பட வேண்டும் என்றும் பொருள் கொள்ளுதல் கூடாது. மாறாக அவைகளுக்குச் சமமான அல்லது அவைகளைவிடச் சிறந்த வேதமான குர்ஆனை அருளியிருக்கிறான் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

மேற்படி வசனத்தில் குறிப்பிட்டுள்ள 'ஆயத்' என்கிற அரபி வார்த்தைக்கு இறை வசனங்கள் என்று பொருள் பொருள் கொண்டால், மேற்படி வசனங்கள் அருள்மறை குர்ஆனில் உள்ள வசனங்கள் என்று பொருள் கொள்ள வேண்டுமேத் தவிர, அருள் மறை குர்ஆனுக்கு முன்னால் அருளப்பட்ட வேதங்களான தவ்ராத் - இன்ஜீல் - ஜபூர் - வேதங்களில் உள்ள வசனங்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது. மேலும் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் எதுவும் அல்லாஹ்வால் வழக்கிலிருந்து விட்டொழிக்கப்பட்டு விட்டதாக கருதக் கூடாது. மாறாக மேற்படி வசனங்களுக்கு சமமாக அல்லது மேற்படி வசனங்களை விடச் சிறந்த வசனங்களை அருளியிருப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும். முன்னர் இறக்கப்பட்ட வசனங்களுக்கு சமமாக அல்லது அதைவிட சிறந்த வசனம் பின்னர் இறக்கியருளப்பட்டதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களிலும், முஸ்லிம் அல்லாத மாற்று மதத்தவர்களிலும் பலபேர் மேற்படி வசனங்களுக்கு பொருள் கொள்ளும் போது, ஒரு விஷயத்தைப் பற்றி புதிய வசனங்கள் இறக்கப்படும் போது அந்த விஷயம் சம்பந்தமாக முன்னால் இறக்கப்பட்ட வசனங்கள் வழக்கிலிருந்து விட்டொழிக்கப் படவேண்டும் என தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர். முந்தைய வசனங்கள் இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தாது என்றும், பழைய வசனங்களுக்குச் சமமாக அல்லது, இன்னும் சிறப்பிற்குரிய புதிய வசனங்கள் இறக்கியருளப்பட்டதால் முந்தைய வசனங்களை வழக்கிலிருந்து விட்டு விட வேண்டும் என்கிற தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். இன்னும் முந்தைய வசனங்கள் - புதிதாக இறக்கியருளப்பட்ட வசனங்களோடு முரண்படுகின்றது என்கிற தவறான கருத்தையும் கொண்டுள்ளனர். இவ்வாறு இறக்கியருளப்பட்ட வசனங்களை சிலவற்றை உதாரணங்களோடு நாம் ஆய்வு செய்வோம்.

2. முழு குர்ஆனைப் போன்ற ஒன்றையோ அல்லது குர்ஆனில் பத்து அத்தியாயங்களை போன்றவற்றையோ அல்லது ஒரே ஒரு அத்தியாயத்தைப் போன்றோ கொண்டு வருமாறு பணித்தல்.

இஸ்லாத்தை எதிர்த்து வந்த அரபிகளில் ஒரு சிலர் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வேதமல்ல. மாறாக அண்ணல் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்டது என்று குற்றம் சுமத்தி வந்தனர். அவ்வாறு குற்றம் சுமத்தி வந்த அரபிகளுக்கு சவால் விடும் விதமாக, அல்லாஹ் அருள்மறை குர்ஆனின் கீழக்கண்ட வசனத்தை இறக்கியருளினான்:
'இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது' என்று (நபியே!) நீர் கூறும்.'.
(அல்-குர்ஆன் அத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ இஸ்லாயீல் - 88வது வசனம்.)

குற்றம் சுமத்தி வந்த அரபிகளுக்கு சவால் விட்ட அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம், கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் சவாலை இன்னும் எளிதாக்குகிறது.

அல்லது 'இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்' என்று அவர்கள் கூறுகிறார்களா?. '(அப்படியானால்) நீங்களும் இதைப்போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள்- நீங்கள் உண்மையாளராக இருந்தால்.! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்', என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் அத்தியாயம் 11 ஸுரத்துல் ஹுது - 13 வது வசனம்.)

குற்றம் சுமத்திய அரபிகளுக்கு, அருள்மறை குர்ஆன் கீழ்க்கண்ட வசனங்களின் மூலம் தனது சவாலை மேலும் எளிதாக்குகிறது.
இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: 'நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப்போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்: அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!' என்று. (அல்-குர்ஆன் அத்தியாயம் 10 ஸுரத்துல் யூனுஸ் - 38 வது வசனம்.)

இன்னும், ((முஹம்மது (ஸல் என்ற)) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து) க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.' 'அப்படி நீங்கள் செய்யாவிட்டால் - அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது - மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும், அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) நிராகரிப்பாளர்களுக்காவே அது சித்தப்படுத்தப் பட்டுள்ளது (அல்-குர்ஆன் அத்தியாயம் 02 ஸுரத்துல் பகராவின் - 23 - 24 வது வசனங்கள்.)

இவ்வாறு அல்லாஹ் ஸுப்ஹானஹுவத்தாலா தனது சவாலை சிறிது சிறிதாக எளிதாக்குகிறான். அருள்மறை குர்ஆன் முதலில் அருள்மறை பற்றி குற்றம் சுமத்திய அரபிகளுக்கு - குர்ஆனைப் போன்று வேறொரு வேதத்தை கொண்டு வருமாறு பணிக்கிறது. பின்பு குர்ஆனில் உள்ளது போன்று பத்து அத்தியாயங்களை கொண்டு வருமாறு பணிக்கிறது. கடைசியாக குர்ஆனில் உள்ளது போன்று ஒரே ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள் என்று பணிக்கிறது. இவ்வாறு கொண்டு வருவதற்கு கட்டளையிட்டதன் மூலம் - அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 23 மற்றும் 24 வது வசனங்கள் அதற்கு முன்புள்ள முன்று வசனங்களான 17:88, 11:13, 10:38 ஆகிய வசனங்களோடு முரண்படவி;ல்லை. இரண்டு கருத்துக்கள் அல்லது செயல்கள் ஒன்றுக்கொன்று மாறுபடும் நிலைக்கு - (அதாவது இரண்டு செயல்கள் அல்லது கருத்துகள் ஒரே நேரத்தில் செயல்பட முடியாத நிலைக்கு) - முரண்பாடு என்று பொருள்.

அருள்மறை குர்ஆனின் பதினேழாவது அத்தியாயத்தின் 88 வது வசனம் மாற்றப்பட்டு விட்டாலும், அந்த வசனம் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்வின் வார்த்தையாக - அது சொல்லும் பொருளுக்கு விளக்கமாக -இன்றும் நிலைபெற்றுள்ளது. அந்த வசனத்தின் மூலம் அருள்மறை குர்ஆன் விடுத்த சவால் இன்றைக்கும் நிலைபெற்று நிற்கிறது. அதபோலவே அதற்கு பின்னால் உள்ள வசனங்களான 11:13 மற்றும் 10:38 போன்ற வசனங்களும் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்வின் வார்த்தைகளாக, அவைகள் சொல்லும் பொருளுக்கு விளக்கமாக நிலைபெற்று நிற்கின்றன. எந்த வசனத்தின் பொருளும் எந்த வசனத்தின் பொருளோடும் முரண்படாமல் - அவைகள் சொல்லக் கூடிய பொருளுக்கு உரிய நிலையில் நிலைபெற்று நிற்கின்றன. கடைசியில் சொல்லப்பட்ட வசனத்தின் மூலம் விடப்பட்ட சவாலானது, முந்தைய வசனங்களின் மூலம் விடப்பட்ட சவாலைவிட எளிதானது. இவ்வாறு கடைசி வசனத்தின் மூலம் விடப்பட்ட எளிதான சவாலே இன்னும் நிறைவேற்றப்படாத போது, முந்தைய மூன்று வசனங்களின் மூலம் விடப்பட்ட சவாலை நிறைவேற்றுவது என்கிற செயலுக்கு இடமில்லை.

உதாரணத்திற்கு - படிப்பில் மந்தமாக உள்ள ஒரு மாணவனைப் பார்த்து - அவன் பத்தாவது வகுப்பில் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே மாணவரைப் பார்த்து அவர் ஐந்தாவது வகுப்பில் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன். பின்பு அதே மாணவரைப் பார்த்து அவர் முதலாம் வகுப்பில் கூடத் தேறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று சொல்கிறேன். இறுதியில் அவர் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்கு தகுரியானவர் இல்லை என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாணவன் பள்ளியில் சேர வேண்டுமெனில் முதலில் பாலர் பள்ளியில் தேற வேண்டும். நான் கடைசியாக என்ன சொன்னேன் எனில் - மேற்படி மந்தமான மாணவன் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்று தகுதியானவன் இல்லை என்று சொன்னேன். நான் மேலே சொன்ன நான்கு வாக்குகளில் எதுவும் - ஒன்றுக் கொன்று முரண்படவில்லை என்பதை நன்றாகக் கவனிக்க வேண்டும். ஆனால் இறுதியாக நான் சொன்ன மேற்படி மந்தமான மாணவன் பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்று தகுதியானவன் இல்லை என்கிற வாக்கு மாத்திரம் மேற்படி மாணவனின் அறிவுத் திறனை அறிந்து கொள்ள போதுமானதாகும். பாலர் பள்ளியில் கூடத் தேறுவதற்கு தகுதியில்லாத மாணவன் - முதலாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும், பத்தாம் வகுப்பிலும் தேர்வு பெற தகுதியுள்ளவன் என்கிற கருத்துக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

3. வெறியூட்டும் போதையை படிப்படியாக தடைசெய்தல்.
அருள்மறை குர்ஆனில் மேற்படி வசனங்களுக்கு மேலும் ஓர் உதாரணம் வெறியூட்டும் போதையை படிப்படியாக தடைசெய்தல் சம்பந்தமான வசனங்கள் ஆகும். கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 219 வது வசனம் குடிபோதையை தடைசெய்வது பற்றி இறங்கிய முதல் வசனமாகும்.

'(நபியே!) மது பானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்: நீர் கூறும்: 'அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கின்றது: மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு: ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம், அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.'
(அல்குர்ஆன் 2:219)

குடி போதையை தடை செய்வது பற்றி இரண்டாவதாக இறக்கப்பட்ட வசனம் அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 43வது வசனமாகும்:
'நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்.
'(அல்குர்ஆன் 4:43)

குடி போதையை தடை செய்வது பற்றி கடைசியாக இறக்கப்பட்ட வசனம் அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வது வசனமாகும்:
'நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத் தக்கச் செயல்களிலுள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.'

அருள்மறை குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற பின்பு, அவர்கள் உயிரோடு வாழ்ந்திருந்த காலமான இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்டது. அவர்கள் காலத்தில் சமுதாயத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் யாவும் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது. சமுதாயத்தில் திடீரென- எதிர்பாராத விதத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், கலகம் அல்லது குழப்பம் விளைவிக்க காரணமாக அமையலாம். எனவே சமுதாயத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் யாவும் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டது

மதுபானம் அருந்துவதை தடை செய்யும் வசனங்கள் மூன்று நிலைகளில் கொண்டு வரப்பட்டது. முதலாவது வசனம் மதுபான போதையில் பெரும் பாவமும், சில பயன்களும் உண்டு. ஆனால் பாவமானது பலனைவிட அதிகமாகும் என்று உணர்த்துகிறது. மதுபானம் அருந்துவதை தடை செய்வது பற்றி இரண்டாவதாக இறங்கிய வசனம், போதையோடு இருக்கும் நிலையில் தொழுகையை மேற்கொள்ளாதீர்கள் என்று வலியுறுத்துகிறது. தொழும் காலங்களில் - போதையில் இருத்தல் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வசனம், தொழாத நிலையில் போதையில் இருக்கலாமா - கூடாதா என்பது பற்றி குறிப்பிடாமல் விட்டு விடுகிறது. போதையில் இருக்கலாமா? இருக்கக் கூடாதா? என்பது பற்றி குர்ஆன் குறிப்பிடாமல் விட்டு விடுகிறது. தொழாத நேரங்களில் போதையில் இருக்கலாம் என்று குர்ஆன் குறிப்பிட்டு இருந்தால், அது சொன்ன முந்தைய வசனத்தோடு கண்டிப்பாக முரண்பட்டிருக்கும். ஆனால் அல்லாஹ் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அருள்மறை குர்ஆனை இறக்கியருளி இருக்கிறான். எனவேதான் அருள்மறை குர்ஆனில் முரண்பாடுகளே இல்லை. கடைசியாக எல்லா நேரங்களிலும் போதையை தடை செய்யும் வசனம் - அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வசனத்தின் மூலம் இறக்கியருளப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்ட மூன்று வசனங்களும் ஒன்றுக் கொன்று முரண்படவில்லை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட மூன்று வசனங்களும் ஒன்றுக் கொன்று முரண்பட்டால், சமகாலத்தில் குறிப்பிட்ட மூன்று வசனங்களையும் நாம் பின்பற்ற முடியாமல் போயிருக்கும். ஒரு முஸ்லிம் அருள்மறை குர்ஆனின் அனைத்து வசனங்களையும் பின்பற்ற வேண்டும் என்றிருப்பதால் மேற்குறிப்பிட்ட வசனங்களில் கடைசியாக இறக்கியருளப்பட்ட வசனமான ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90 வது வசனத்தை பின்பற்ற வேண்டும். அதே சமயம் அதற்கு முன்னால் இறக்கியருளப்பட்ட இரண்டு வசனங்களையும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

உதாரணத்திற்கு நான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றதில்லை என்று சொல்கிறேன். பின்பு நான் கலிஃபோர்னியாவிற்கும் சென்றதில்லை என்று சொல்கிறேன். கடைசியாக நான் சொல்கிறேன் நான் அமெரிக்காவிற்கும் சென்றதில்லை என்று சொல்கிறேன். மேற்படி எனது கூற்றுக்கள் எதுவும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை. மாறாக எனது ஒவ்வொரு கூற்றும் அதிகமான விபரங்களைத்தான் தருகின்றன. எனது மூன்றாவது கூற்று முந்தைய எனது இரண்டு கூற்றுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இவ்வாறாக நான் கடைசியாக சொன்ன, நான் அமெரிக்கா சென்றதில்லை என்ற எனது கூற்று எனது முந்தைய இரண்டு கூற்றுக்களான நான் லா லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றதில்லை என்பதையும் நான் கலிஃபோர்னியாவிற்கும் சென்றதில்லை என்பதையும் உள்ளடக்கியுள்ளது.
அதுபோலவே, எல்லா நேரங்களிலும் போதiயுடன் இருப்பது தடை செய்யப் பட்டதற்கான வசனம் இறங்கியவுடன், தொழுகை நேரத்தில் போதையுடன் இருப்பதுவும் தானாகவே தடை செய்யப் பட்டுவிட்டது. தவிர போதையுடன் இருப்பவர்களுக்கு உண்டான 'போதையுடன் இருப்பதில் நன்மையை விட தீமையே அதிகம்' - என்கிற செய்தியும் இன்று வரை அழியாத உண்மையாக விளங்கி வருகிறது.

4. அருள்மறை குர்ஆனில் முரண்பாடுகளே இல்லை.
மேலே சுட்டிக் காட்டப்ட்ட வசனங்களில் 'விட்டொழிக்கும் விதி'யை நடைமுறை படுத்தவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை. ஏனெனில் மேலே சுட்டிக் காட்டப்பட்ட வசனங்கள் மூன்றையும் ஏக காலத்தில் ஒன்றாக பின்பற்றி நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகளே அதிகமாக உள்ளது.
அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட வேதம் என்பதால் - அதில் முரண்பாடுகளை காணமுடியாது. மேற்படி கருத்துக்கு ஆதாரமாக அருள் மறை குர்ஆனின் நான்காவது அத்தியாம் ஸுரத்துல் நிஷாவின் 82 வது வசனம் அமைந்துள்ளதை காணலாம்:

'அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா?. (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால்' இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.'.
(அல்குர்ஆன் 4:82)

கேள்வி எண்: 5
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.

பதில்:

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்
இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ - அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் - நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary) யின் கருத்து.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O'Leary) எழுதிய 'இஸ்லாம் கடந்து வந்த பாதை' (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
'இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.'

4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.
ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians)
கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians) இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் - இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

7. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.
இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்
அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் - இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:
அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் - உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.

'(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.'

11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான 'அல்மனாக்' பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை 'தி ப்ளெய்ன் டிரத்' என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:
இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்
'ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.' என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.